'ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், நிரந்தர கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்'
என, மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
கறுப்பு பண விவகாரங்களை கையாளவும், அன்னிய நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவு படி, தற்போதைய மத்திய அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை நியமித்துள்ளது.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இந்தக் குழுவானது, உள்நாட்டில் கறுப்பு பணத்தைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
*ஒரு லட்சத்திற்கும் மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிடுவதையும், ஆதார் அட்டை நகலை சமர்ப்பிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். காசோலையாகவோ அல்லது பணமாகவோ கொடுத்து பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.
*'உங்களின் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற மத்திய தகவல் தொகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதில், பான் கார்டு எண், பாஸ்போர்ட் எண், ஆதார் எண் அல்லது ஓட்டுனர் உரிம எண் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் இவற்றை குறிப்பிட வேண்டும்.
*தனி நபர் ஒருவர், 10 லட்சம் அல்லது 15 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கப் பணத்தை மட்டுமே, தன்னிடம் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
*ஐரோப்பிய நாடுகளில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய தடை உள்ளது. அதேபோன்ற முறையை, இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும். அதேநேரத் தில், இந்த பணப் பரிமாற்ற அளவானது, சாதாரண மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிப்பதாக இருக்கக் கூடாது.
*50 லட்சம் ரூபாய்க்கு மேலான வரி ஏய்ப்பையே, பெரிய அளவிலான குற்றமாகக் கருத வேண்டும். அப்போது தான், சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு சிரமம் ஏற்படாது.
*மற்ற நாடுகளுடன் இந்தியர்கள் மேற்கொள்ளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த தகவல்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு, கூட்டியோ அல்லது குறைத்தோ காண்பிக்கப்படலாம். அது, தவிர்க்கப்பட வேண்டும்.
*எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை, தீவிரமாககண்காணிக்க வேண்டும்.இதில், சட்ட விரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்தால், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ், அன்னிய நாடுகளில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரைகள் அமலாகவில்லை:
*கறுப்பு பண விவகாரங்களை கையாள, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னரே, இந்தக் குழு அமைக்கப்பட்டது.
*அன்னிய நாடுகளில், கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் தொடர்பான, 628 பேர் பட்டியலை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. அந்தப் பட்டியல், தற்போது சிறப்பு புலனாய்வு குழுவின் பரிசீலனையில் உள்ளது.
*கறுப்பு பணம் குறித்து ஆய்வு செய்து வரும் இந்தக் குழு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு வங்கியில், 4,479 கோடி ரூபாய் பணத்தை, இந்தியர்கள் பதுக்கி உள்ளதாகவும், உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணம், 14,958 கோடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
*சிறப்பு புலனாய்வு குழு தற்போது தெரிவித்துள்ள பரிந்துரைகளைப் போல, இதற்கு முன்னும், ஏராளமான பரிந்துரைகளை பல நிபுணர் குழுக்கள் பரிந்துரைத்துள்ளன. ஆனாலும், அவற்றை எல்லாம், முந்தைய மத்திய அரசுகள் அமல்படுத்தவில்லை.
Post a Comment