திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் சேகர் (26), பத்மா (22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர்களது திருமணம் கடந்த 10–ந் தேதி நடந்தது. நண்பர்கள், உறவினர்கள் சூழ சுபமுகூர்த்த நேரத்தில் தேவியின் கழுத்தில் தாலி கட்டினார் சேகர். தொடர்ந்து அனைத்து சடங்குகளும், திருமண விருந்தும் தடபுடலாக நடந்தது. மாலையில் பெண்வீட்டிற்கு மறு வீடும் சென்று வந்தனர் புதுமணத் தம்பதியினர்.
அன்று இரவு புதுமாப்பிள்ளை சேகர் முதலிரவு அறையில் புதுப்பெண் தேவிக்காக பரபரப்புடன் காத்திருந்தார். வாழ்க்கை துணையாக வரப்போகும் மனைவியிடம் என்னவெல்லாம் பேசலாம் என தனக்குள்ளே பேசி அவர் ஒத்திகை பார்த்துக் கொண்டார். நேரம் ஆக ஆக அவருக்கு படபடப்பு கூடியது.
அப்போது அறை கதவை திறந்து கொண்டு தேவி பால் செம்புடன் நுழைந்தாள். சரசரக்கும் பட்டுப் புடவை, தலை நிறைய மல்லிகை பூ என தேவதை போல் மெல்ல சேகரை நோக்கி தேவி நடந்து வந்தாள். சேகரின் மனம் உற்சாகத்தில் துள்ளியது. அருகில் வந்த தேவி, குமாரின் காலை தொட்டு வணங்கினாள். அவளின் தோளை தொட்டுத் தூக்கினார் சேகர். அப்போது தேவியின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.
நல்ல கணவன் கிடைத்த சந்தோஷத்தில் தேவி ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள் என நினைத்த சேகர் தேவியின் கண்ணீரை துடைத்தார். ‘‘உன் கண்ணீல் இனி கண்ணீரே வரக்கூடாது. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன்...’’ என்றார் சேகர். அதற்கு பிறகு தான் தேவி கூறிய வார்த்தைகள் சேகரை இடியாய் தாக்கின. ‘‘என் மனது என்னிடம் இல்லை. அது எங்கள் ஊரில் கல் உடைக்கும் தொழில் செய்யும் வசியிடம் உள்ளது. மனதை பறி கொடுத்து விட்டு எப்படி நான் உங்களுடன் வாழ்வேன்?’’ என்றாள்.
இதை கேட்டதும் சேகரின் புது மாப்பிள்ளை முறுக்கு உடைந்து நொறுங்கியது. வாழ்வில் வசந்தமாக மனைவி வரப்போகிறாள் என நினைத்திருந்த நேரத்தில் புயல் வந்து தாக்கியது போல் சின்னா பின்னமானார் சேகர். ‘‘ஊர் அறிய நமக்கு திருமணம் நடந்து விட்டது. இதற்கு பிறகு முதலிரவு வேறு ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாயே? நிச்சயதார்த்தம் முடிந்த பிறகாவது சொல்லிருக்கலாமே?’’ என்றார்.
‘‘சொல்லத்தான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை. என் மனது முழுவதும் வசியிடம் தான் உள்ளது. என்னை அவரிடம் நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும். இல்லா விட்டால் நான் செத்துவிடுவேன்’’ என்றாள் தேவி.
தான் தாலி கட்டிய மனைவி தன்னை வேறு ஒருவருடன் சேர்த்து வைக்கும் படி தன்னிடமே கூறுவதை கேட்டு நொந்து போன சேகர். அமைதியாக அமர்ந்தார். விடிய விடிய யோசித்தார். மனைவியை அவளது காதலனுடன் சேர்த்து வைப்பது தான் சரி என அவருக்கு தோன்றியது.
காலையில் சேகர் தனது உறவினர்களை அழைத்து பேசினார். தேவியின் பெற்றோரிடமும் அவர் காதல் விவகாரம் குறித்து கூறினார். இதையடுத்து வசியை அழைத்து பேசினர். அவரும் தேவியை திருமணம் செய்வதாக கூறினார். இதனால் உடனே அருகில் உள்ள ஒரு கோவிலில் தேவி– வசி திருமணம் நடந்தது.
யாரும் விட்டுக் கொடுக்க முடியாத பந்தமான மனைவியையே அவளது விருப்பத்திற்காக விட்டுக் கொடுத்த சேகரை அனைவரும் பாராட்டினர். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Post a Comment