Latest Posts :

லிங்கா திரை விமர்சனம்!

ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்திலே சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன என்றும் அடுத்த ஒரு வாரத்தில் வசூலில் பெரும் சாதனைப் படைக்கப் போகிறது என்று சில ஊடகங்களில் வந்த செய்தியெல்லாம் உண்மையில்லையாம்.படம் வெளியாகி நான்காவது நாளே அதாவது 16 -ஆம் தேதி திங்கள்கிழமைக்கு சென்னையின் முக்கிய திரையரங்குகளான சங்கம் காம்ப்ளக்ஸ், உட்லண்ட்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ், ஐ ட்ரீம்ஸ் போன்றவற்றில் டிக்கெட்கள் உள்ளன.


இதை நம்மிடம் சொன்ன பிரபல விநியோகஸ்தர் ஒருவர்,”ரஜினியின் ரசிகர்கள் பலருக்கு லிங்கா படம் திருப்தியளிக்க வில்லை என்றுதான் சொல்கிறார்கள், இது சூப்பர் ஸ்டாரின் படம் போல இல்லை என்றும் கத்திக் கூச்சல் போடும் போக்கு அதிகமாக இருக்கிறது.அதுவும் இன்று திருநெல்வேலியில் ஒரு தியேட்டரில் படம் சரியில்லை என்று சத்தம் போட்ட ரஜினி ரசிகர்கள் அந்த தியேட்டரில் அராஜகத்தில் ஈடுபட்டு, சேர், டோர் போன்றவற்றை உடைத்து விட்டு போயுள்ளார்கள். அதே போல சென்னையில் உள்ள காசி தியேட்டரில் நள்ளிரவு 1 மணி காட்சி ஆரம்பிப்பதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டதால், திரையரங்க கண்ணாடிகள் சிலவற்றை ரசிகர்கள் உடைத்தார்கள்.இதெல்லாம் ரஜினி பட ரிலீசின் போது நடக்காத விஷயம். போற போக்கைப் பார்த்தால் இந்த படமும் டிஸ்ட்ரிபியூட்டர்களை குப்புற தள்ளி விடும் என்றுதான் தோன்றுகிறது” என்றார்.
அது சரி.. லிங்கா பட விமர்சனம்தான் என்ன? என்று கேட்பவர்களுக்காக::
’கோச்சடையான்’ என்ற பொம்மைப் படத்திற்குப் பிறகு ”ரஜினிகாந்த் அவ்வளவு தான்..” என்று நினைத்த ரசிகர்களுக்கு, தான் இருப்பதை நினைவுப் படுத்த, அதிவிரைவு விருந்து படைக்க நினைத்த ரஜினிகாந்த், வெந்ததும் வேகாததுமாக கொடுத்திருக்கும் படம் தான் ’லிங்கா’.
வெள்ளையன் காலத்து இந்தியாவில் குறு நில மன்னர் லிங்கேஸ்வரனான ரஜினிகாந்த், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஏஎஸ் படித்து கலெக்டராகவும் இருக்கிறார். அப்போது சோலையூர் என்ற கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் தண்ணீர் இன்றி வறுமையால் தற்கொலை செய்வதை அறியும் அவர், அந்த இடத்தில் அணை ஒன்றை கட்ட முடிவு செய்கிறார். ஆனால், இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, தனது கலெக்டர் வேலையை ராஜினாமா செய்யும் மன்னர் ரஜினிகாந்த், தனது சொந்தப் பணத்தில், கிராம மக்களின் உதவியோடு அணை கட்ட ஆரம்பிக்கிறார். ரஜினிகாந்த் அணை கட்டினால் தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்பதால், அணையை கட்டவிடாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் பல சதிவேலைகளை செய்ய அதை அனைத்தையும் முறியடித்து அணையை வெற்றிகரமாக கட்டி முடிக்கும் ரஜினிகாந்தை, அணை திறப்பு விழாவின் போது, பிரிட்டிஷ் அதிகாரிகள் சூட்சியின் காரணமாக, கிராம மக்கள் அவமானப் படுத்தி அங்கிருந்து விரட்டியடிப்பதுடன், அணை அருகே அவர் கட்டிய கோவிலையும் மூடி விடுகிறார்கள்.
பிறகு, ரஜினிகாந்த் அப்பாவி என்றும், தனது சொத்துக்களை இழந்து அணையை அவர் கட்டிய விபரமும் கிராம மக்களுக்கு தெரியவர, அவர்கள் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் கிராமத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். அவர்களுடைய அழைப்புக்கு ரஜினி மறுப்பு தெரிவித்ததால், அந்த கோவில் திறந்தால் அது லிங்கேஸ்வரனாலாயோ அல்லது அவருடைய வாரிசு கையினாலோயோ மட்டுமே திறக்கப்படும், இல்லையெனில் அந்த கோவில் மூடியே வைக்கபப்டும் என்று கிராமத்து நாட்டாமை விஜயகுமார் சத்தியம் செய்துவிட்டு இறந்து போகிறார்.
இந்த கதை பிளாஸ்பேக்கில் நடந்து முடிக்க, லிங்கேஸ்வரனின் பேரனான மற்றொரு ரஜினி கையினால் அந்த கோவிலை திறக்க கிராம மக்கள் முடிவு செய்கிறார்கள். அதற்காக, அந்த கிராமத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் அனுஷ்கா, பேரன் ரஜினிகாந்தை கண்டுபிடித்து விஷயத்தைச் சொல்லி அவரை கிராமத்துக்கு வருமாறு அழைக்கிறார். திருடனான பேரன் ரஜினிகாந்த், போலீஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த மரகத லிங்கத்தை திருடிச் சென்றுவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் ரஜினிகாந்த், அந்த கோவில் மற்றும் அந்த அணை கட்ட, ராஜா லிங்கேஸ்வரன் பட்ட கஷ்ட்டத்தையும், தற்போது அந்த கோவிலை திறந்தால் தான் அணையையும் ஊர் மக்களையும் காப்பாற்ற முடியும் என்ற விஷயத்தையும், அந்த ஊர் பெரியவர் மூலம் அறிகிறார். பிறகு லிங்கத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றாரா அல்லது அந்த கோவில் ரகசியத்தை அறிந்து அந்த அணையையும், கிராமத்தையும் காப்பாற்றினாரா என்பது தான் க்ளைமாக்ஸ்.
தனது ரெகுலர் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி, ‘எந்திரன்’ போன்ற படங்களில் நடித்த போதும் சரி, ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள ‘சந்திரமுகி’ போன்ற படங்களில் நடித்த போதும் சரி, ரஜினிகாந்த் என்ற பெயருக்கும், அவரிடம் ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் எந்தவித பங்கமும் வந்துவிடாமல், முழு திருப்தியைக் கொடுத்த ரஜினிகாந்த், இந்த படத்தில் அவரும் ஏமாந்து, அவருடைய ரசிகர்களையும் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் நடிப்பு குறித்து நாம் விமர்சனம் செய்வது முட்டாள்த்தனம். காரணம் அவருக்கும் நடிப்புக்கும் ரொம்ப தொலைவு என்பதை அவருடைய ரசிகர்களே அறிவார்கள். மற்றபடி அவரிடம் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டைல், அந்த விறுவிறுப்பு உள்ளிட்ட ரஜினியின் அம்சங்கள் இந்த படத்தில் கடுகு அளவு தான்.
ராஜா ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார். பொந்தா கோழி போல கொழுக் மொழுக் என்று இருக்கும் இவரை எப்படி பாலிவுட் நாயகியாக அங்கீகரித்திருக்கிறது என்பது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. நடிப்பிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி எந்த இடத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. திருடன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரும் அனுஷ்கா, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். சில இடங்களில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.
படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் என்றால், அது சந்தானம் வரும் சில காட்சிகளை மட்டும் சொல்லலாம். மற்றபடி அவருடன் வரும் கருணாகரன், பாலாஜி உள்ளிட்டவர்கள் செட் பிராப்பர்ட்டியாகவே பயன்பட்டிருக்கிறார்கள்.
ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பதை விட பேசுவது தான் அதிகம். பேசுகிறார்கள்…பேசுகிறார்கள்…பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவாக இரவு நேரங்களில் தான் பணி புரிவார் என்றும், பகலில் உறங்குவார் என்றும் சொல்வார்கள். இந்த படத்திற்கு அவர் பகலில் இசையமைத்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு பாடல்கள் இருக்கின்றன. பின்னணி இசையில் சில இடங்களில் ரஹ்மான் ஸ்கோர் பண்னியிருந்தாலும், பெரும்பாலான இடங்களில், ரஹ்மான் இசைப் பள்ளியில் ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்கள் இசையமைத்திருப்பார்களோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், சண்டைக்காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
வேகமாக செயல்படக்கூடிய ரஜினிகாந்தின், படத்தின் காட்சிகள் ரொம்ப மெதுவாக பயணிப்பது தான் இப்படத்தின் முதல் பலவீனம். அதிலும் ரஜினிகாந்தின் அறிமுக காட்சியில் எந்தவித ஈர்ப்பும் இல்லாதது ரசிகர்களை ஆரம்பத்திலேயே சோர்வடைய செய்கிறது.
மன்னர் ரஜினிகாந்தின் அறிமுகத்தின் போது வரும் ரயில் சண்டைக்காட்சி ரொம்ப நீளமாக உள்ளது. முழு சண்டைக்காட்சியையும் கிராபிக்ஸ் செய்திருப்பதால் ”எப்படா…முடியும்…” என்று ரசிகர்கள் புலம்பவது தியேட்டருக்கு வெளியே வரை கேட்கிறது.
திருடனாக வரும் ரஜினிகாந்த், வைர நகை கண்காட்சியில், விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை திருடும் காட்சி ரசிக்க வைக்கிறது. மற்றபடி படத்தில் எந்தவிதமான டிவிஸ்டோ, புதுமையான காட்சிகளோ இல்லை. எப்போதும் போல இந்த படத்திலும், தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மழையில் நனைந்தபடி செல்கிறார். மற்ற ரஜினி படங்களில் ரசிக்ககூடிய அளவுக்கு இருக்கும் இதுபோன்ற காட்சிகள் கூட இந்த படத்தில் ரசிக்க முடியவில்லை என்ற போதில், படத்தில் வரும் வெள்ளைக் காரர்களைக் காட்டிலும் ரஜினியின் ரசிகர்கள் கண்களுக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தான் பெரிய வில்லனாக தெரிகிறார்.
Share this article :

Post a Comment

Blogger Widgets
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. How To Do Anything - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger